மாமல்லபுர சிற்பங்களை 12ல் பார்வையிடுகிறார் ஜின்பிங்

தினமலர்  தினமலர்
மாமல்லபுர சிற்பங்களை 12ல் பார்வையிடுகிறார் ஜின்பிங்

சென்னை,: மாமல்லபுரத்தின் சிற்பங்களையும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், 12ம் தேதி, பிரதமர் மோடியுடன் இணைந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிடுகிறார்.

பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பேச்சு நடத்த உள்ளார். இதற்காக, சீன அதிபர், 11ம் தேதி பிற்பகல், சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து, மதியம், 2:00 மணிக்குள், கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட சோழா நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். இரண்டு மணி நேரம் ஓய்வுக்கு பின், மாலை. 4:00 மணிக்கு, ராஜிவ் காந்தி சாலை வழியாக, மாமல்லபுரம் செல்கிறார்.


அங்கு, இரு நாட்டு நல்லுறவு தொடர்பாக, பிரதமர் மோடியுடன், அவர் பேச்சு நடத்துகிறார். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவிலில், இந்த சந்திப்பு நடக்கிறது.
இந்நிகழ்ச்சியை முடித்து, இரவு, 8:00 மணிக்கு, சீன அதிபர், மீண்டும் சென்னை திரும்புகிறார். இரவு, நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.மறுநாள் காலை, 8:00 மணிக்கு, நட்சத்திர ஓட்டலில் இருந்து, மாமல்லபுரம் கிளம்புகிறார். அங்கு, பிரதமருடன் பேச்சை தொடரவுள்ளார்.இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிடுகின்றனர். அங்கிருந்து, மதியம், 12:00 மணிக்கு புறப்படும் சீன அதிபர், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலை அடைகிறார். மதியம், 2:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, சீனா திரும்புகிறார்.


மூலக்கதை