இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 09, 2019

வதோதரா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்மிருதி ராணி பங்கேற்கவில்லை. பிரியா பூனியா அறிமுக வாய்ப்பு பெற்றார்.

கோஸ்வாமி அசத்தல்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜுலான் கோஸ்வாமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் லீசெல் லீ (0) அவுட்டானார். எக்தா பிஷ்ட் ‘சுழலில்’ திரிஷா செட்டி (14), மிக்னன் டு பிரீஸ் (16) சிக்கினர். லாரா வால்வார்ட் (39) ஆறுதல் தந்தார். ஷிகா பாண்டே ‘வேகத்தில்’ கேப்டன் சுனே லுாஸ் (22), நாடின் டி கிளார்க் (0) வெளியேறினர். பூணம் யாதவ் ‘சுழலில்’ ஷப்னிம் இஸ்மாயில் (3), டுமி செகுகுனே (6) சரணடைந்தனர். பொறுப்பாக ஆடிய மரிசேன் காப் அரைசதம் கடந்தார். கோஸ்வாமி ‘வேகத்தில்’ நான்டுமிசோ ஷாங்கேஸ் (4), காப் (54) அவுட்டாகினர்.

தென் ஆப்ரிக்க பெண்கள் அணி 45.1 ஓவரில், 164 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் கோஸ்வாமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

பிரியா அபாரம்: எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய ஜெமிமா அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது ஜெமிமா (55) அவுட்டானார். பூணம் ராத் (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய பிரியா, அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்திய அணி 41.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரியா (75), கேப்டன் மிதாலி ராஜ் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து தொடரில் இந்திய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி அக். 11ல் வதோதராவில் நடக்கவுள்ளது.

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். கடந்த 1999ல் (ஜூன் 26) அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் முதன்முறையாக காலடி வைத்த இவர், இதுவரை 10 டெஸ்ட் (663 ரன்கள்), 204 ஒருநாள் (6731 ரன்கள்), 89 சர்வதேச ‘டுவென்டி–20’ (2364 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சமீபத்தில் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

* சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிதாலி ராஜ் (6731 ரன்), அதிக ஒருநாள் போட்டிகளில் (204) பங்கேற்ற வீராங்கனைகள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

 

மூலக்கதை