பாபா அபராஜித் சதம்: தமிழக அணி வெற்றி | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
பாபா அபராஜித் சதம்: தமிழக அணி வெற்றி | அக்டோபர் 09, 2019

ஜெய்ப்பூர்: ரயில்வேஸ் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் பாபா அபராஜித் சதம் விளாச, தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்), உள்ளூர் கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ரயில்வேஸ் அணிக்கு மணிஷ் ராவ் (55), பிரதாம் சிங் (43) நம்பிக்கை அளித்தனர். கேப்டன் அரிந்தம் கோஷ் (24), தினேஷ் மோர் (13), கரண் சர்மா (5) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, ரயில்வேஸ் அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 200 ரன்கள் எடுத்தது. துர்ஷந்த் சோனி (20) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் பாபா அபராஜித் 4 விக்கெட் கைப்பற்றினார்.

அபராஜித் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டி தமிழக அணிக்கு அபினவ் முகுந்த் (11), முரளி விஜய் (6) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய விஜய் சங்கர் அரைசதமடித்தார். அபாரமாக ஆடிய பாபா அபராஜித் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

தமிழக அணி 44.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபராஜித் (111), விஜய் சங்கர் (72) அவுட்டாகாமல் இருந்தனர். இது, தமிழக அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 7வது வெற்றி.

மூலக்கதை