ஆஸி., பெண்கள் சாதனை வெற்றி | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
ஆஸி., பெண்கள் சாதனை வெற்றி | அக்டோபர் 09, 2019

பிரிஸ்பேன்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அலிசா ஹீலி சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இலங்கை அணிக்கு சமாரி அட்டபட்டு (103) சதம் கடந்து கைகொடுத்தார். யசோதா மெண்டிஸ் (3), அனுஷ்கா சஞ்ஜீவானி (7), கேப்டன் ஷசிகலா சிறிவர்தனே (1) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ரேச்சல் ஹெய்ன்ஸ் (63) நம்பிக்கை அளித்தார். அபாரமாக ஆடிய அலிசா ஹீலி சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். ஆஸ்திரேலிய அணி 26.5 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. ஹீலி (112), கேப்டன் மேக் லானிங் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 3–0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

புதிய சாதனை

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி, பெண்களுக்கான சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது. கடந்த 2018, மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–0 எனக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, விண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் வென்றது. இதற்கு முன், பெலிண்டா கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் (1997, டிச. 12 முதல் 1999, பிப். 7 வரை) வெற்றி பெற்றிருந்தது சாதனையாக இருந்தது.

மூலக்கதை