கோப்பை வென்றது இலங்கை: பாக்., மூன்றாவது தோல்வி | அக்டோபர் 09, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இலங்கை: பாக்., மூன்றாவது தோல்வி | அக்டோபர் 09, 2019

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, கோப்பை கைப்பற்றியது. 

பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இலங்கை அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி லாகூரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெர்னாண்டோ விளாசல்

இலங்கை அணிக்கு குணதிலகா (8), சமரவிக்ரமா (12) மோசமான துவக்கம் தந்தனர். ஆமிர் ‘வேகத்தில்’ பானுகா 3 ரன்களில் வெளியேறினார். ஏஞ்சலோ பெரேரா (13) விரைவில் திரும்பினார். அறிமுக வீரர் ஒசாடா பெர்னாண்டோ அபாரமாக செயல்பட்டார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த இவர் அரை சதம் விளாசினார். கேப்டன் ஷனாகா (12) ஏமாற்றினார். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. பெர்னாண்டோ (78) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர் 3 விக்கெட் வீழ்த்தினார். 

பேட்டிங் ஏமாற்றம்

பின், களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான் (0), பாபர் ஆசம் (27) விரைவில் திரும்பினர். ஹசரங்கா ‘சுழலில்’ கேப்டன் சர்பராஸ் (17) சிக்கினார். ஹாரிஸ் சோகைல் (52) அரை சதம் கடந்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இப்டிகர் (17), வகாப் ரியாஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். 

இதன் மூலம், பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரை 3–0 என முதல் முறையாக கைப்பற்றிய இலங்கை அணி புதிய சாதனை படைத்தது. 

‘பிங்க்’ நிறம்

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இரு அணியினரும் இளம் சிவப்பு நிற ‘ரிப்பனை’ ஜெர்சியில் அணிந்து விளையாடினர்.

 

 

மூலக்கதை