இந்திய, சீன பாதுகாப்பு குழு மாமல்லபுரத்தில் சல்லடை போட்டு ஆய்வு

தினமலர்  தினமலர்
இந்திய, சீன பாதுகாப்பு குழு மாமல்லபுரத்தில் சல்லடை போட்டு ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப பகுதிகளை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் சீன பாதுகாப்பு குழுவினர் இணைந்து, தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் பார்வையிட உள்ள, சிற்பங்கள், குன்று பகுதிகள், பிரதமரின், சிறப்பு பாதுகாப்பு குழுவின் கட்டுப்பாட்டிற்கு, நேற்று வந்தன. இரு நாட்டு பாதுகாப்பு குழுவினரும், அடுத்தடுத்து, பாதுகாப்பு ஆய்வில் ஈடுபட்டனர்.



சீன பாதுகாப்பு குழுவினர், சிற்ப வளாகங்களை, அவர்களின் கட்டுப்பாட்டில், இன்று கொண்டு வருவர் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமை போலீசாரும், முக்கிய பகுதிகளில் முகாமிட்டு, ஆய்வு செய்தனர்.மேலும், கடற்படை, இந்திய கடலோர காவல் படையினர், கடலில் கண்காணிக்கின்றனர்; வான்வழியும் கண்காணிக்கப்படுகிறது. மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், திபெத்தியர் தங்கியுள்ளனரா என, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

நாளை துவங்கி, 13ம் தேதி வரை, வெளியூர் வாகனங்கள், மாமல்லபுரத்தில் நுழைய அனுமதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின், ஐந்து டாக்டர்கள், ஐந்து உதவி டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட, 25 பேர், மாமல்லபுரத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.அவசர மீட்பு பணிக்காக, தீயணைப்பு மற்றும் மீட்பு படை, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

பிரதமர் மோடி, 11ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில், திருவிடந்தை பகுதி ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு வந்து, கோவளம் தனியார் விடுதிக்கு, காரில் செல்கிறார்.சிறப்பு பாதுகாப்பு குழுவினர், ஹெலிகாப்டர் இயக்க கால நிலை, பாதுகாப்பு குறித்து, நேற்று ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, இப்பகுதிகளில் பார்வையிட்டார். ''மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில், மரங்கள் வெட்டி, சாலையை ஆக்கிரமித்து, அலங்கார வளைவு அமைத்திருப்பது, அரசு விதி மீறல்,'' என, புகார் கூறினார்.

2 நைஜீரியர்களிடம் விசாரணை


கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு, நேற்று முன்தினம் இரவு, இரு வாலிபர்கள் வந்து, வாடகைக்கு வீடு கேட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்,அவர்களின், விசா போன்ற அடையாள அட்டைகளை கேட்டுள்ளார். அவர்கள் மறுக்கவும், போலீசில்புகார் அளித்தார்.
கேளம்பாக்கம் போலீசார், நைஜீரியர்களை பிடித்து விசாரித்ததில், அகோமயே ஜாஷர் வெவெபல், 27, பர்ரெல் பிம்யாஜிட்டா யாப்தா, 27 என்பது தெரிய வந்தது.மேலும், மதுரவாயில் கவால் நிலையத்தில், இவர்கள் மீது வழக்கு உள்ளதால், இவர்களின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளதும் தெரிந்தது.


மூலக்கதை