கோரிக்கை! பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க... மாணவர்கள், அரசு ஊழியர்கள் கடும் அவதி

தினமலர்  தினமலர்
கோரிக்கை! பு.முட்லூர் புறவழிச்சாலையில் பஸ் இயக்க... மாணவர்கள், அரசு ஊழியர்கள் கடும் அவதி

கிள்ளை:சிதம்பரத்தில் இருந்து பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக கடலுாருக்கு, புதிய அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக வங்கி நிதி உதவியுடன் வெள்ளாற்றில் பாலம் கட்டப்பட்டு, சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பு.முட்லுார் வரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையில் உள்ள சி.முட்லுாரில் தான் அரசு கலைக் கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.சி.முட்லுார் அரசு கல்லுாரியில் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அதே போல், வட்டார போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றங்களில் பணி புரிவோர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் தினசரி பணிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பஸ்கள் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் கிள்ளை, முடசல் ஓடை, பிச்சாவரம் செல்லும் பஸ்களில் ஏறி கல்லுாரிக்கு வருகின்றனர்.ஆனால் கடலுார், புவனகிரி, பரங்கிப்பேட்டை மார்க்கத்தில் இருந்து கல்லுாரிக்கு வரும் மாணவர்களுக்கு, பஸ் வசதி இல்லை. அவர்கள் பு.முட்லுார் வரை பஸ்சில் வந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு நடந்தே வருகின்றனர்.
இதனால், மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கால விரயம் ஏற்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லுாரிக்கு வரமுடியாத சூழல் ஏற்படுகிறது.மழைக் காலங்களில், மாணவர்கள் நனைந்தபடியே நடந்து செல்லும் நிலை உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைவர்.மேலும், சி.முட்லுாரில் தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளதால், வழக்கு சம்மந்தமாக கோர்ட்டிற்கு வருவோர், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவரும் பஸ் வசதி இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிதம்பரத்தில் இருந்து கடலுாருக்கு பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக புதியதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டால், அரசு பஸ்களுக்கு காலவிரயம் குறையும்; மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல இயலும்.
கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு எளிதில் செல்லவே பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த பாலம் தற்போது வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.எனவே, பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்களின் நலன்கருதி கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு, பு.முட்லுார் புறவழிச்சாலை வழியாக புதிய அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை