காங்., - எம்.பி.,யிடம் அதிகாரிகள் விசாரணை

தினமலர்  தினமலர்
காங்.,  எம்.பி.,யிடம் அதிகாரிகள் விசாரணை

புதுடில்லி : 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான கார்த்தியிடம், அமலாக்க துறை அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி, அன்னிய முதலீடு பெற அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை சார்பில், தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கார்த்தி, ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் வெளியில் வந்தார்.

சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது, டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, கார்த்திக்கு, அமலாக்க துறை சார்பில், 'சம்மன்' அனுப்பப்பட்டிருந்தது. டில்லியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்துக்கு நேற்று வந்த கார்த்தியிடம், அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின், அவர் கிளம்பிச் சென்றார். இது குறித்து, கார்த்தி, ''இங்கு இருப்பவர்களுக்கு தசரா வாழ்த்து கூறுவதற்காக வந்தேன்,'' என, சிரித்தபடி கூறினார்.

மூலக்கதை