2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா தென் ஆப்ரிக்கா?

தினகரன்  தினகரன்
2வது டெஸ்ட் இன்று தொடக்கம் தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா தென் ஆப்ரிக்கா?

புனே: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது.டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோகித் ஷர்மா, 2 இன்னிங்சிலும் தொடர்ச்சியாக சதம் விளாசி பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தினார். இளம் வீரர் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து திறமையை நிரூபித்த நிலையில், புஜாரா, ஜடேஜா, கோஹ்லி ஆகியோரும் கணிசமாக ரன் குவித்து பார்மில் இருப்பதை உறுதி செய்தனர்.பந்துவீச்சில் அஷ்வின் - ஜடேஜா சுழல் கூட்டணியும், வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 2வது இன்னிங்சிலும் அற்புதமாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினர். ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் புனேவில் இன்று தொடங்குகிறது.இந்த போட்டியிலும் வென்று 2-0 என முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் கைப்பற்ற இந்திய அணி வரிந்துகட்டுகிறது. அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதுடன் சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். எந்த வகையான ஆடுகளம் அமைக்கப்பட்டாலும் அந்த சவாலை எதிர்கொள்ள இந்திய பந்துவீச்சாளர்கள் தயாராக இருப்பதாக பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதே சமயம், முதல் டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு கடும் நெருக்கடி கொடுக்க தென் ஆப்ரிக்க அணியும் முனைப்புடன் உள்ளது. முதல் இன்னிங்சில் டீன் எல்கர் (160), கேப்டன் டு பிளெஸ்ஸி (55), குவின்டான் டி காக் (111) ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், 2வது இன்னிங்சில் மார்க்ராம் (39), முத்துசாமி (49*), பியட் (56) ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காகிசோ ரபாடாவின் வேகப் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததும் தென் ஆப்ரிக்காவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துவிட்டது. அறிமுக சுழல் முத்துசாமி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், அவரது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். எனவே அவருக்கு பதிலாக லுங்கி என்ஜிடி அல்லது ஜுபேர் ஹம்சாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களில் வென்று ஆஸ்திரேலியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த தொடரில் வென்றால் புதிய சாதனை படைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் விளையாடிய எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியதில்லை என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளவும் கோஹ்லி & கோ முனைப்புடன் உள்ளது. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, மயாங்க் அகர்வால், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா, தியூனிஸ் டி புருயின், குவின்டான் டி காக், டீன் எல்கர், ஸுபேர் ஹம்ஸா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ராம், செனூரன் முத்துசாமி, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, வெர்னான் பிலேண்டர், டேன் பியட், காகிசோ ரபாடா, ரூடி செகண்ட். கோஹ்லி 50...இந்திய அணிக்கு 50 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த 2வது வீரர் என்ற பெருமை விராத் கோஹ்லி வசமாக உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டுகிறார். தற்போது அவர் சவுரவ் கங்குலியுடன் (49 டெஸ்ட்) 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.எம்.எஸ்.டோனி 2008ல் இருந்து 2014வரை இந்திய அணியின் கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகளில் தலைமை வகித்து முதலிடத்தில் உள்ளார். ரோகித் ஜஸ்ட் என்ஜாய்!‘டெஸ்ட் போட்டிகளில் ரோகித் ஷர்மா தொடக்க வீரராக அனுபவித்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தால் பல போட்டிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் சூழல் அடிக்கடி உருவாகும். இது ஒட்டுமொத்த அணிக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு மடங்கு புள்ளிகள் வழங்கலாம்’ என்று கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை