அபராஜித், விஜய் ஷங்கர் விளாசல் தமிழகம் 7வது வெற்றி

தினகரன்  தினகரன்
அபராஜித், விஜய் ஷங்கர் விளாசல் தமிழகம் 7வது வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம் - ரயில்வேஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த ரயில்வேஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. மணிஷ் ராவ் அதிகபட்சமாக 55 ரன் விளாசினார். பிரதம் சிங் 43, கேப்டன் கோஷ் 24, துருஷந்த் சோனி 20*, தேவ்தர் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.தமிழக அணி பந்துவீச்சில் அபராஜித் 4, எம்.அஷ்வின் 2, முகமது, நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 44.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்து தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்தியது.தொடக்க வீரர்கள் முரளி விஜய் 6, அபினவ் முகுந்த் 11 ரன்னில் வெளியேறிய நிலையில், அபராஜித் - விஜய் ஷங்கர் ஜோடி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. அபராஜித் 111 ரன் (124 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), விஜய் ஷங்கர் 72 ரன்னுடன் (113 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.தமிழகம் 7 போட்டியில் 7 வெற்றியுடன் 28 புள்ளிகள் குவித்து சி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் (6 போட்டியில் 24 புள்ளி), பெங்கால் (18), சர்வீசஸ் (16) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. தமிழக அணி எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களில் 12ம் தேதி மத்தியப் பிரதேசத்தையும், 16ம் தேதி குஜராத் அணியையும் சந்திக்கிறது.

மூலக்கதை