லித்தியம் பேட்டரியை மேம்படுத்திய 3 வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
லித்தியம் பேட்டரியை மேம்படுத்திய 3 வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது. இவ்விருது, வேதியியல் பேராசிரியர்களான அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றையக் காலக்கட்டத்தில் செல்போன் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் வரை அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் நீடித்து செயல்பட வைக்கும் லித்தியம் அயன் பேட்டரிகளை மேம்படுத்தியவர்கள் இவர்கள்தான்.1970ம் ஆண்டு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், விட்டிங்ஹாம் முதல் முதலில் பெரிய அளவிலான லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்கினார். அவருடன் ஜான் குட்டெனப், யோஷினோ ஆகியோர் இணைந்து சிறிய வடிவிலான செயல்திறன் மிகுந்த லித்தியம் பேட்டரிகளை மேம்படுத்தினர். இவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் டிசம்பர் 10ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அப்போது மூவருக்கும் தங்கப்பதக்கத்துடன், சுமார் ரூ.6.5 கோடி பகிர்ந்தளிக்கப்படும். இன்று, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு, தேர்வுக்குழுவில் ஏற்பட்ட பாலியல் குற்றச்சாட்டால், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, நடப்பாண்டில் இருவருக்கு இவ்விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை