'பொருளாதார கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்!'

தினமலர்  தினமலர்
பொருளாதார கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்!

சென்னை : ''நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை சார்பில், தமிழகத்தில், 'டிஜிட்டல்' முறையில், ஏழாவது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை, சென்னை, கலைவாணர் அரங்கில், கவர்னர் புரோஹித், நேற்று துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: நாட்டில், முதல் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1977ல் நடந்தது. தற்போது, ஏழாவது கணக்கெடுப்பு நடக்கிறது. வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகள், அந்நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு உள்ளிட்டவை, கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் வாயிலாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில், முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். உலகில், மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தொழில் மற்றும் சேவை துறைகளில், விரைவான வளர்ச்சி அடைவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்தியா, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, ஸ்கில் இந்தியா' மற்றும் அனைவருக்கும் வீடு ஆகிய திட்டங்கள், நம் இலக்கை அடைவதற்கான, முன்னுரிமை பொருளாதார திட்டங்களாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

பொருளாதார கணக்கெடுப்புகள் போன்ற முயற்சிகள், நம் நாட்டின் பலத்தை புரிந்து கொள்ள உதவுகின்றன. தகவல் சேகரிக்க வரும் கணக்கீட்டாளர்களுக்கு, பொது மக்கள், சரியான விபரங்களை வழங்க வேண்டும். இதன் வாயிலாக, உரிய நேரத்தில், அரசு, சரியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை