பாக்.,கிலிருந்து காஷ்மீரில் குடியமர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம்!

தினமலர்  தினமலர்
பாக்.,கிலிருந்து காஷ்மீரில் குடியமர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம்!

புதுடில்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியேறிய 5,300 குடும்பங்களுக்கு குடியமர்வு தொகையாக தலா 5.5 லட்ச ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அடுத்து தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

ஒப்புதல்:

பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பல குடும்பங்கள் பல்வேறு காலகட்டங்களில் அங்கிருந்து வெளியேறி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியேறின. இவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. வாழ்வாதாரத்திற்கே சிரமப்பட்டனர். இத்தகையோருக்கு குடியமர்வு தொகை கொடுக்கப்போவதாக பிரதமர் மோடி 2016ல் அறிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறியவர்களில் 5300 குடும்பத்தினர் முதலில் ஜம்மு - காஷ்மீருக்கு வெளியே குடியேறினர். பின் வாழ்வாதாரம் தேடி அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் குடியேறி விட்டனர். ஆனால் பிரதமர் அறிவித்த குடியமர்வு தொகை திட்டத்தில் இந்த 5300 குடும்பங்கள் இடம் பெறவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப் பிரிவு 370 ஆகஸ்ட் 5ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநில மக்களுக்குத் தேவையான பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த 5300 குடும்பங்கள் பற்றிய தகவல் மத்திய அரசுக்குக் கிடைத்தது. தெளிவான ஆய்வுக்குப் பின் இவர்களுக்கான குடியமர்வுத் தொகையை விடுவிக்க அரசு முடிவு செய்தது. இந்த அடிப்படையில் 5300 குடும்பங்களுக்கும் தலா 5.5 லட்ச ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு:

பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அமைச்சர் ஜவடேகர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.

இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 17 சதவீதமாக தரப்படும். இது ஜூலை முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்படும். பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அமைச்சரவை ஒரே சமயத்தில் 5 சதவீதம் வரை உயர்த்திஉள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.6000 பெற நிபந்தனை நவம்பர் வரை தளர்வு:

சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் பொருட்டு 'பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொந்தமாக 5 ஏக்கர் வரை அரசு ஆவணங்களின் படி விவசாய பூமி வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பலன்களைப் பெற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நவம்பர் 30ம் தேதி வரை தளர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மூலக்கதை