பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம்; வரவேற்க தமிழகம் தயார்

தினமலர்  தினமலர்

சீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு நடக்க உள்ள நிலையில், இருவரையும் வரவேற்க தமிழகம் தயாராகி உள்ளது. வரவேற்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர். சந்திப்பு நடக்கும் மாமல்லபுரம், உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து உள்ளது.

பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்துவதற்கு, நாளை மற்றும் நாளை மறுதினம் சீன அதிபர் ஜி ஜின்பிங், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் வர உள்ளார்.

கலை நிகழ்ச்சிகள்:

சீன அதிபருக்கு தடபுடல் வரவேற்பை அளிக்க, தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழகத்தின் கலைகளை எடுத்துக் கூறும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆங்காங்கே நின்று, இரு நாட்டு தலைவர்களையும் வரவேற்க உள்ளனர். இந்த சந்திப்பு, தமிழகத்தில் நடப்பதற்கு, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் குழு:

இருவரது சந்திப்பால், தமிழகத்தின் பெருமையை, உலகமே பேசும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழக மக்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். தற்போது, சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கு, தமிழகமும் தயாராக உள்ளது. வரவேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்கு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுக்களை, தமிழக அரசு அமைத்து உள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவில் கார்த்திகா, சந்திரகலா, அருண் தம்புராஜ், பிரகாஷ், லலிதா, பொன்னையா, முருகேஷ், மேகநாதரெட்டி, ஆர்த்தி, விஷ்ணு, அனீஷ் சேகர், பாலசுப்பிரமணியம், சமீரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவில் ஈஸ்வரமூர்த்தி, தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எஸ்., அல்லாத போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், குழுவில் இடம் அளிக்கப் பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, ஊரக வளர்ச்சி, கலை மற்றும் பண்பாடு உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த, 34 அதிகாரிகளும், இப்பணிக்காக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பொதுத்துறை செயலர் செந்தில் தலைமையில், தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

15 ஆயிரம் போலீசார்:

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில், 3 உதவி கமிஷனர்கள், 7 இன்ஸ்பெக்டர்கள், 21 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையத்தில் இருந்து, மோடி மற்றும் ஜி ஜின்பிங் வெளியேறும் நுழைவு வாயில்களில், இரண்டு துணை கமிஷனர்கள், ஆறு உதவி கமிஷனர்கள், 16 இன்ஸ்பெக்டர்கள், 48 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 300 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில், ஜி ஜின்பிங் தங்க உள்ள, கிண்டி, ஐ.டி.சி., கிராண்டு சோழா ஓட்டலுக்கு, சேலம் டி.ஐ.ஜி., தலைமையில், ஏழு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இவருக்கு கீழ், மூன்று துணை கமிஷனர்கள், நான்கு உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 36 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து, மாமல்லபுரம் வரை, வழி நெடுகிலும், எட்டு துணை கமிஷனர்கள், இரண்டு கூடுதல் உதவி கமிஷனர்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 270 எஸ்.ஐ.,க்கள் உட்பட, மொத்தம், 15 ஆயிரம் போலீசார், இரவு - பகலாக துாக்கமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் உச்சக் கட்ட பாதுகாப்பு வளையத்திற்கு வந்துள்ளது.

ஜி ஜின்பிங்கின் பயணப் பாதையில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மாற்றுப் பாதையில் அழைத்து செல்வதற்கான ஏற்பாடு களையும், போலீசார் செய்துள்ளனர். பாதுகாப்பு பணிகளை, மத்திய மற்றும் சீன அதிகாரிகள், தமிழக டி.ஜி.பி., திரிபாதி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை