மீட்க நிதி வழங்க மறுப்பு பிஎஸ்என்எல்-ஐ மூடுவதற்கு நிதியமைச்சகம் பரிந்துரை

தினகரன்  தினகரன்
மீட்க நிதி வழங்க மறுப்பு பிஎஸ்என்எல்ஐ மூடுவதற்கு நிதியமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், நிதிச்சிக்கல், தனியார் தொலைத்தொடர்பு துறையினரின் போட்டியால் தள்ளாடி வருகின்றன. வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே சென்று விடுவதால், இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை விருப்ப ஓய்வூதிய திட்டம் மூலம் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதேநேரத்தில் இந்த நிறுவனங்களை மீட்க ₹74,000 கோடி நிதி உதவியை தொலைத்தொடர்பு துறை கோரியிருந்தது. ஆனால், இதை நிதியமைச்சகம் ஏற்கவில்லை. பிஎஸ்என்எல்லில் 1.76 லட்சம் ஊழியர்கள் எம்டிஎன்எல்லில் 22,000 ஊழியர்கள் உள்ளனர். பிஎஸ்என்எல் சம்பளத்துக்கு 750 கோடி முதல் 850 கோடியும், எம்டிஎன்எல் சம்பளத்துக்கு 160 கோடியும் செலவிட வேண்டியுள்ளது. எனவே, கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து, நிறுவனத்தை மூடிவிடலாம் என நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை