பெங்களூருவில் உள்ள சசிகலா சிறையில் போலீசார் அதிரடி சோதனையால் பரபரப்பு : ஆண்கள் பிரிவில் 37 கத்திகள், கஞ்சா செல்போன், சிம்கார்டு பறிமுதல்

தினகரன்  தினகரன்
பெங்களூருவில் உள்ள சசிகலா சிறையில் போலீசார் அதிரடி சோதனையால் பரபரப்பு : ஆண்கள் பிரிவில் 37 கத்திகள், கஞ்சா செல்போன், சிம்கார்டு பறிமுதல்

பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆண்கள் சிறைப்பகுதியில் கத்தி, கஞ்சா, செல்போன், சிம்கார்டு உள்பட பல்வேறு ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை என்றாலே பரபரப்பாகத்தான் பேசப்படும். தமிழகத்தை சேர்ந்த சசிகலா, இங்கு அடைக்கப்பட்ட பின்னர்தான் இந்த பரபரப்பு. தண்டணை கைதியான அவர் பெண்களுக்கான அறைகளில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா மற்றும் ஆண்கள் அறையில் உள்ள கைதிகள் சிலருக்கும் சிறை நிர்வாகம் சார்பில் சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதை உறுதி செய்வதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, அதிரடி சோதனை நடத்தினார். அப்போது சசிகலா உள்பட பல்வேறு கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது உறுதியானது. அதிலும் சசிகலாவிற்கு சமையல் செய்வதற்கு தேவையான பொருட்கள், படுக்கை வசதிகள், சிறையில் இருந்து வெளியே சென்று வருவதற்கு அனுமதி உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது ஆதாரமாக கிடைத்தது. இதற்காக சசிகலா சிறைத்துறை அப்போதைய டி.ஜி.பி சத்யநாராயணராவிற்கு சசிகலா ₹2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சிறை வட்டாரத்தில் கூறப்பட்டது. இதை உறுதி செய்த ரூபா, சிறைத்துறை நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அதில்,  சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருந்தது. அதன் பின்னர் இந்த விவகாரம் புஸ்வானமானது. டி.ஐ.ஜி ரூபாவும் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சில நாட்கள் பரப்பன அக்ரஹாரா சிறை அமைதியாக காணப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு நகரில் நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ரவுடிகள் அடைத்து வைத்துள்ள அறைகளில் இருந்து செல்போன் மூலம் வெளியில் இருக்கும் கொள்ளையர்களுக்கு தகவல் பறிமாறப்படுவதாகவும், வெளியில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருள் உள்ளே எடுத்து செல்லப்படுவதாக ரகசிய தகவல் வெளியானது. இதை உறுதி செய்ய  சி.சி.பி இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் இருந்து 37 வெவ்வேறு வகையான கத்தி, அரிவாள், கஞ்சா, செல்போன், சிம்கார்டு ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தையும் சிறையில் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவர்கள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.இதேபோல் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெண்கள் சிறையிலும் சோதனை நடந்ததாக கூறப்பட்டாலும், போலீசார் அதை உறுதிப்படுத்தவில்லை. இப்பகுதியில் இருந்து என்ன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது என்பது குறித்தும் அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று பரப்பான அக்ரஹாரா சிறைக்கு வந்து சசிகலாவை சந்தித்து பேசினார்.

மூலக்கதை