ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு கார்த்தி சிதம்பரத்திடம் 3 மணி நேரம் விசாரணை : அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி

தினகரன்  தினகரன்
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு கார்த்தி சிதம்பரத்திடம் 3 மணி நேரம் விசாரணை : அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்கு 14 நாட்கள் என்ற வீதம் மூன்று முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை  சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு டெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில்  அவர் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேல் தீவிர விசாரணை நடத்தினர். அதில்,  ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதற்காக ரூ.305 கோடிக்கும் மேல் எப்படி கைமாற்றப்பட்டது?, இது தொடர்பாக இந்திராணி முகர்ஜியை தொடர்பு கொண்டு, அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை சந்திக்க எங்கு ஏற்பாடு செய்யப்பட்டது? வெளிநாடு உட்பட வேறு யார் யார் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டனர்?  வெளிநாட்டில் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு கார்த்தி சிதம்பரம் பிற்பகல் 2 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை