ஊழியர்களுக்கு ஊதியம் தரவே சிக்கல்

தினமலர்  தினமலர்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதே பிரச்னையாகி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக வைத்து, ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இதில், அமெரிக்கா, இந்தியா, சிரியா, துருக்கி, பிரேசில் உட்பட, ௧93 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டாரெஸ், சமீபத்தில் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், அவர், 'பல உறுப்பு நாடுகள், தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை முழுமையாக செலுத்தவில்லை; இதனால், ஐ.நா., சபைக்கு, கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

'சபையின் முக்கிய நடவடிக்கைகளுக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை, விரைந்து அனுப்ப வேண்டும்' என கூறியிருந்தார்.அவர், எந்த நாடுகள், எவ்வளவு பாக்கி வைத்துள்ளன என்ற விபரத்தை, தெரிவிக்கவில்லை. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பிரேசில், எகிப்து, இஸ்ரேல், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஜிம்பாப்வே உட்பட, ௮௧ நாடுகள், ஐ.நா.,வுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையை பாக்கி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அன்டோனியோ குட்டாரெஸ், ஐ.நா.,வின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும், 37 ஆயிரம் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.நா., உறுப்பு நாடுகள், நமக்கு கொடுக்க வேண்டிய பங்கு பணத்தில், 70 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. அதனால், நம் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே, நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய சேமிப்பும் கரைந்து வருகிறது. எனவே, கூட்டம், செயல்பாடுகள், செலவுகள், சேவைகள் உட்பட, அனைத்தையும் நாம் குறைக்க வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே, பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தட்டுப்பாடு காரணமாக, ஐ.நா., சபை, உலகம் முழுவதும், மிகப்பெரிய அளவில் சேவைகளை துண்டிக்க வாய்ப்புள்ளது. ஆசிய நாடுகள், அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றில், ஐ.நா., செய்து வரும் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை