எடியூரப்பா பதவி தப்புமா?

தினமலர்  தினமலர்
எடியூரப்பா பதவி தப்புமா?

பெங்களூரு : முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிஉள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 104 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது. இதையடுத்து, ம.ஜ.த., காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. சமீபத்தில், இந்த கூட்டணி ஆட்சியை அகற்றி, எடியூரப்பா தலைமையில், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது. ஆனால், எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, அவருக்கும் டில்லி தலைமைக்கும் உரசல் இருந்து வந்தது. அவரால், மாநில விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை.

எதிர்ப்பு:

எடியூரப்பா தன்னிச்சையாக செயல் முடியாத அளவுக்கு, மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்டில், கர்நாடகாவின், 22 மாவட்டங்களில் கடும் மழையால், வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில், 88 பேர் உயிரிழந்து, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டது; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

இந்த மழை மற்றும் வெள்ளத்தால், 34 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து எடியூரப்பா முறையிட்டார். மத்திய அரசுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையிலும், மாநில அரசின் கோரிக்கைகளுக்கு பின்னும், இரண்டு மாதங்கள் கழித்து, வெள்ள நிவாரண நிதியாக 1,200 கோடி ரூபாய் மட்டுமே, மத்திய அரசு வழங்கியது. இதற்கு, மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையில், எடியூரப்பா சரியாக செயல்படவில்லை என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயல் தலைவர், ஜெ.பி. நட்டாவிடம், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா புகார் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிஉள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவரும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு பொது செயலருமான, பி.எல். சந்தோஷுக்கு கர்நாடக அரசியலில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

முரண் நடவடிக்கை:

மாநிலம் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும், அவரின் கருத்தை கேட்ட பின்னரே, அமித் ஷா முடிவு எடுக்கிறார். எடியூரப்பா கட்சியிலிருந்து நீக்கிய நபர்கள், மீண்டும் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளை கவனிக்கும் போது, எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி, புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இதை மறுக்கும், கர்நாடகாவை சேர்ந்த, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி, ''எடியூரப்பா தான் எங்கள் தலைவர். அவர் மீது வேண்டுமென்றே சிலர் புரளியை கிளப்புகின்றனர்,'' என்றார். முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்கும்பட்சத்தில், கர்நாடகா பா.ஜ.,வில் பிளவு ஏற்படுவது உறுதி.

மூலக்கதை