உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் தலைவர் அறிக்கை

தினமலர்  தினமலர்
உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் தலைவர் அறிக்கை

வாஷிங்டன்:உலகளாவிய மந்தநிலையின் பாதிப்புகள், இந்தியாவில் அதிகம் காணப்படுவதாக, பன்னாட்டு நிதியத்தின் புதிய தலைவரான, கிறிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:உலகப் பொருளாதாரம், ஒருமித்த மந்த நிலையில் காணப்படுகிறது. இதன் விளைவாக, உலகின், 90 சதவீத நாடுகளில் வளர்ச்சியின் வேகம் குறைந்து உள்ளது.வளர்ந்து வரும் நாடுகளில் இது இன்னும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவை போன்ற நாடுகளில், வளர்ச்சி குறைந்துள்ளது.


மந்த நிலை

இந்த ஆண்டின் வளர்ச்சி, பத்தாண்டுகளில் இல்லாத வகையில், அதன் மிகக் குறைந்த நிலைக்கு சரியும்.அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ள, ‘2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான உலக பொருளாதார பார்வை’, பொருளாதார சரிவை காட்டும் வகையில் அமைந்திருக்கும். நடப்பு ஆண்டில், உலகின் கிட்டத்தட்ட 90 சதவீதம் பகுதிகளில் மெதுவான வளர்ச்சியையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலகப் பொருளாதாரமானது, ஒருமித்த மந்த நிலையில் உள்ளது.வரும் தரவுகள் அனைத்தும் ஒரு சிக்கலான சூழ்நிலையையே உணர்த்துகின்றன.


வேலையின்மை


உலகெங்கிலும் இந்த ஒட்டுமொத்த சரிவு நிலை இருந்தபோதிலும், கிட்டத்தட்ட, 40 வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 5 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும்,

40 நாடுகளில், 19 நாடுகள், ஆப்ரிக்க கண்டத்தின், தெற்கு சஹாரா பகுதியில் உள்ள நாடுகளாகும். அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் வேலையின்மை, வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கிறது.இந்தியா, பிரேசில் போன்ற பெரிய அளவில் வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரத்தில், இந்த ஆண்டு மந்தநிலை இன்னும் அதிகமாக காணப்படுகிறது.சீzசீனாவைப் பொருத்தவரை, அது கண்ட வேகமான வளர்ச்சியிலிருந்து, படிப்படியாக குறைந்து வருகிறது.


சீர்திருத்தம்

ஏற்கனவே சிக்கல்களை சந்தித்து வரும் நாடுகள், மேலும் அதிக சவால்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் என தெரியவருகிறது. இத்தருணத்தில், நிதிக்கொள்கையை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தை அறிவிப்பவர்களுக்கு, கூடுதல் செலவுகள் ஏற்படவும் கூடும்.


சரியான வகையிலான, சரியான சீர்திருத்தங்கள் தேவை. இவை வளர்ந்து வரும் பொருளாதாரங் களின் வாழ்க்கை தரமானது, மேம்பட்ட பொருளாதாரங்களின் தரத்தை எட்டும் வேகத்தை இரட்டிப்பாக்கும்.வர்த்தகம் என்பது ஒரு சந்தர்ப்பமாகும். ஆயினும், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.பாதுகாப்பாக உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்து வது, நிதி ஒழுங்குமுறையை சீர் செய்வது ஆகியவற்றின் மூலம், நிதிமோசடி, மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை