சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினமலர்  தினமலர்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை உறுதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடில்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்திய பயண திட்டம், சீன வெளியுறவு அமைச்சகத்தால், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசும், இதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, சீன அதிபரின் மாமல்லபுரம் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான, சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், நாளை இந்தியா வரவுள்ளதாகவும், சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியை, அவர் சந்தித்து பேசவுள்ளதாகவும், ஒரு மாதத்துக்கு முன்பே, தகவல்கள் வெளியாகின. அதற்கான ஏற்பாடுகளும், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடந்து வந்தன. மாமல்லபுரத்துக்கு, 20 நாட்களுக்கு முன்பே, சீன அதிகாரிகள் வந்து, ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

சீன பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை, மாமல்லபுரத்தில், பல கோடி ரூபாய் செலவில், கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலையம், சீன அதிபர் தங்கவுள்ள, சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களிலும், இந்த வழித்தடங்களிலும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திபெத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்துக்கு, சுற்றுலா பயணியர் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீன அதிபரின் வருகையை, அந்த நாட்டு அதிகாரிகள், நேற்று காலை வரை உறுதி செய்யவில்லை. மத்திய அரசும், இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பதற்றம்:

இதனால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சீன அதிபரின் வருகை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத வரை, அதை உறுதி செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. இதனால், மத்திய அரசு அதிகாரிகளிடம், ஒருவித பதற்றம் நிலவியது. இந்நிலையில், சீன அதிபர், இந்தியா வருவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நேற்று மதியம், அவரது வருகையை, இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சீன அதிபரின் வருகையை உறுதி செய்து, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. சீன அதிபர், பிரதமர் மோடியுடன், வரும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், மாமல்லபுரத்தில் பேச்சு நடத்துகிறார். இது ஒரு, கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும். இரு தரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள், ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகள் ஆகியவை குறித்து, இரு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளனர். காஷ்மீர் விவகாரம், நம் நாட்டின் உள்நாட்டு பிரச்னை என்பதால், அது குறித்து, இந்த சந்திப்பில் பேச்சு நடக்க வாய்ப்பில்லை.

விளக்கம்:

அதேநேரத்தில், காஷ்மீர் விவகாரம் குறித்து, சீன அதிபர் தரப்பில், ஏதாவது கேள்வி எழுப்பினால், அதற்கு, பிரதமர் மோடி, உரிய விளக்கம் அளிப்பார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது சீனாவில் உள்ளார். அந்த சந்திப்புக்கும், சீன அதிபரின் இந்திய வருகைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. பயங்கரவாதத்தை ஒழிப்பது, ஆசிய பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது, இரு நாட்டு எல்லையில், அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கு தீர்வு காண்பது, வர்த்தக பிரச்னைகள் ஆகியவை குறித்தும், பிரதமர் மோடியும், சீன அதிபரும் பேச உள்ளனர்.

கடந்தாண்டு, சீனாவின் வுகான் நகரில், இரு நாட்டு தலைவர்களும், முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியுள்ள நிலையில், தற்போது, மாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீர் பிரச்னை; ஜி ஜின்பிங் கருத்து:

சீனாவுக்கு வந்துள்ள பாக்., பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிக்கை: பாக்., பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சு நடத்தினேன். காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். இந்தப் பிரச்னைக்கு, இரு நாடுகளும் இணைந்து, அமைதியான முறையில் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என்பதே, சீனாவின் விருப்பம். இந்த விவகாரத்தில், முக்கிய பிரச்னைகள் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

எல்லை பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் பேச்சு:

சீன அதிபர் வருகை குறித்து, அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சூனியிங் கூறியதாவது: வரும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார். சென்னை அருகே மாமல்லபுரத்தில், சீன அதிபர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்துகிறார். இரு நாட்டு எல்லை பிரச்னையை தீர்ப்பது குறித்து, இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தவுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை