பிரான்ஸ் - இந்தியா உறவு; ராஜ்நாத் சிங் நம்பிக்கை

தினமலர்  தினமலர்
பிரான்ஸ்  இந்தியா உறவு; ராஜ்நாத் சிங் நம்பிக்கை

பாரிஸ்: ''பிரான்ஸ் - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவு, மேலும் பலமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன், பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. இந்த பேச்சு, பயனுள்ளதாக இருந்தது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் வந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன், 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு:

இந்த ஒப்பந்தப்படி, டசால்ட் நிறுவனம், 36 போர் விமானங்களை நமக்கு தர வேண்டும். முதல் விமானம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தன் பயணத்தின் அடுத்த கட்டமாக, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை, ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவு, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் ராணுவ ரீதியிலான வர்த்தகம் ஆகிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன் நடத்திய பேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் பலமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ரீதியிலான அனைத்து விஷயங்களையும், மறு ஆய்வு செய்யவும், ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும், இந்த சந்திப்பு உதவும். ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக, 18 விமானங்கள், வரும், 2021 பிப்ரவரிக்குள், இந்தியா வந்து விடும். மீதமுள்ள விமானங்கள், 2022 மே மாதத்துக்குள் வந்து விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

அதிக வரி வேண்டாம் :

போர் விமானங்களுக்கான இன்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, சபரான் நிறுவனத்தின் அதிகாரி, ஆலிவர் ஆண்ட்ரீஸ், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், ''இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். வரி, சுங்க விதிமுறைகள் என்ற பெயரில், முதலீடு செய்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ''எங்கள் நிறுவனம், இந்தியாவில், 1,260 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது,'' என்றார்.

மூலக்கதை