தீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர்

தினகரன்  தினகரன்
தீபாவளி பரிசாக அறிவிப்பு,..மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி 5% உயர்வு: ஒரு கோடி பேர் பயனடைவர்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய  அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, கூடுதலாக  5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,  ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16  ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும். மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற  ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 கோடி விவசாயிகள்  ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒவ்வொரு  ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய அரசு  அகவிலைப்படியை ஒன்று முதல் 3 சதவீதம் வரையிலும் உயர்த்துவது வழக்கம். இம்முறை முதல் முறையாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்குடும்பங்களுக்கு நிதி உதவிகாஷ்மீர் மாநில பிரிவினைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் காஷ்மீருக்கு வெளியே தங்கி வாழும் குடும்பங்களுக்கு மறுகுடியேற்ற நிதி உதவி வழங்கப்படும் என  கடந்த 2016ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, 5,300 குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரே தவணையாக ரூ.5.5 லட்சம் வழங்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ‘‘ஓர் வரலாற்று பிழையை  இந்த அரசு சரி செய்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வந்து வெவ்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த குடும்பங்கள் தற்போது காஷ்மீரிலேயே குடி அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மூலக்கதை