உலக போட்டித்திறன் இந்தியா 68வது இடம்
புதுடில்லி:உலகளாவிய போட்டித் திறன் குறியீட்டில், இந்தியா, 10 இடங்கள் சரிந்து, 68 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
பல நாடுகள் கண்ட முன்னேற்றத்தால், உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில், இந்தியா, 10 இடங்கள் சரிந்து, 68 வது இடத்துக்கு வந்துள்ளது. அதேசமயம், சிங்கப்பூர், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, உலகின் பெரிய போட்டி பொருளாதாரமாக, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட, உலக பொருளாதார மன்றம், உலகளாவிய போட்டித் திறன் குறியீட்டை வெளியிட்டு வருகிறது.
இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சந்தை அளவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா உயர்ந்த இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், நிதி துறை, ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்த போதிலும், அதன் வங்கி அமைப்பின் திறன் பலவீனமானதால், போட்டித்திறனை அது குறைத்து விட்டது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.