இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து: பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு...பீகார் காவல்துறை தகவல்

தினகரன்  தினகரன்
இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து: பொய் புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு...பீகார் காவல்துறை தகவல்

பாட்னா: நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென்,  சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்ட 49 பேர் பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். இதனையடுத்து, திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம்  ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பீகார்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49  பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு  தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.வரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை!சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள்,   ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்கள் என பல்வேறு  தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து என்று பீகார் போலீஸ் அறிவித்துள்ளது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களை கொடுத்ததால் தான் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக பீகார்  போலீஸ் விளக்கமளித்துள்ளது. புகாருக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய புகார்தாரர் தவறிவிட்டார் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் மாநில போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை