அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: மோசடி செய்ததா விஜய் டிவி?

தினமலர்  தினமலர்
அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: மோசடி செய்ததா விஜய் டிவி?

சென்னை: பிக்பாஸ் பைனல்ஸ் வீடியோவில் மதுமிதாவின் கணவர் வீடியோ காட்சியையும் சேர்த்து விஜய் டிவி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல காமெடி நடிகை மதுமிதா. டைட்டிலை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மதுமிதா, சக போட்டியாளர்களுடனான சண்டையால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு சம்பள பணம் கேட்டு மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி சார்பில் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களைச் சந்திக்க விடாமல் தன்னை தடுப்பதாக மதுவும் விஜய் டிவிக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். இப்படியாக விஜய் டிவிக்கும், மதுமிதாவுக்கும் இடையேயான சண்டை தொடர்ந்து வருகிறது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருந்த இறுதி நாட்களில்கூட, மதுமிதாவை சிறப்பு விருந்தினராக அழைக்கவில்லை. அதேபோல், பைனல்ஸிலும் கலந்து கொள்ள அவருக்கும், சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால், பிக்பாஸ் பைனல்ஸ் தொடர்பான வீடியோவில் ஒரு காட்சியில் பார்வையாளர்களில் ஒருவராக மதுமிதாவின் கணவர் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டது. இது மதுமிதா ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது தொடர்பாக சமூகவலைதளம் மூலமாக மதுமிதாவிடமும் கேட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை என டுவீட் மூலமாகவும், வீடியோ மூலமாகவும் மதுமிதாவின் கணவர் மோசஸ் விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் விஜய் டிவி பைனல்ஸ் காட்சிகளில் மோசடி செய்து விட்டதாக ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர்.

மூலக்கதை