தசரா விழாவில் காதலை அறிவித்த பிக்பாஸ் ஜோடி

தினமலர்  தினமலர்
தசரா விழாவில் காதலை அறிவித்த பிக்பாஸ் ஜோடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கிடையே காதல் வருவதும், அது கல்யாணத்தில் முடிவதும் சகஜமாகி விட்டது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவும், ஓவியாவும் இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல்கள் உருவாகின.

இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டியும், பாடகி நிவேதிதா கவுடாவும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். சீசன் 5 நடந்து கொண்டிருக்கும்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் வெளியில் வந்த பிறகு இதுபற்றி அவர்கள் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடந்து வரும் தசரா விழாவில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் திடீரென சந்தன் கவுடா, மண்டியிட்டு அமர்ந்து ஒரு மோதிரத்தை நிவேதிதாவுக்கு நீட்டி தன் காதலை தெரியப்படுத்தினார். இதை வெட்கத்துடனும், ஆச்சர்யத்துடனும் நிவேதிதா ஏற்றுக் கொண்டார். ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதற்கிடையில் புனிதமான தசரா விழாவை இருவரும் களங்கப்படுத்திவிட்டதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மூலக்கதை