அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி

ஆதம்பூர்: அரியானாவில் பாஜ சார்பில் போட்டியிடும் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியே இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அரியானா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜ சார்பில் ஆதம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை சோனாலி போகாத் போட்டியிடுகிறார்.

அவர், தற்போது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், பால்சமந்த் கிராமத்தில் பிரசாரம் செய்த சோனாலி, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி மீண்டும் மக்களை பதில் கோஷம் எழுப்பச் சொன்னார்.

ஆனால், அங்கு கூடியிருந்த பலரும் மீண்டும் பதில் கோஷம் எழுப்பாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

அதனால் கோபமடைந்த சோனாலி, ‘‘நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள். நாட்டுக்காக ஜே என கூற முடியாத உங்களைப் போன்ற இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

இவ்வாறு பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சோனாலி பேசிய வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது பால்சமந்த் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனாய்க்கு எதிராக சோனாலி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை