மூணாறு மலைப்பாதையில் மண் சரிவு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மூணாறு மலைப்பாதையில் மண் சரிவு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் சாவு

மூணாறு: மூணாறு அருகே மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இறந்தனர். கேரள மாநிலம், மூணாறு செல்லும் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு முதல் தமிழகப் பகுதியான போடிமெட்டு வரை ரூ. 381 கோடி செலவில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.

நேற்று மதியம் 3. 30 மணியளவில் மூணாறு அருகே உள்ள லாக்காடு, கேப் ரோடு பகுதியில் திடீரென கனமழை பெய்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

பல இடங்களில் பாறைகளும் உருண்டு விழுந்தன. பாறைகள் விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் சுபேர் (35), திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவை சேர்ந்த கிளீனர் பால்ராஜ் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சாந்தம்பாறை எஸ்ஐ வினோத்குமார் மற்றும் போலீசார் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண் சரிவின்போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை  சேர்ந்த உதயன் (19) மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மாயமானார்கள்.

பாறைகள் விழுந்ததில் லாரி நசுங்கியது.

உதயன், தமிழ்ச்செல்வனை தேடும் பணியில் நள்ளிரவு வரை போலீசார் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், தேடும் பணி கைவிடப்பட்டது.

இருவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 5. 30 மணியளவில் மீண்டும் மாயமான இருவரையும் தேடும் பணி துவங்கியது.

அப்போது  ஒரு பாறையின் இடுக்கில் சிக்கி கிடந்த உதயனின் உடல் மீட்கப்பட்டது. தமிழ்செல்வனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மண்சரிவு காரணமாக லாக்காடு, கேப் ரோடு சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

.

மூலக்கதை