ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்க விவகாரம் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜலகண்டேஸ்வரர் கோயில் மூல லிங்க விவகாரம் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு?

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் 100 ஆண்டுகள் பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதன், நுழைவாயிலில் பிரம்மாண்ட நந்தி சிலை உள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது இந்த ஆலயத்தை பாலவாடியில் கிராம மக்கள் மாற்றி அமைத்து கொண்டனர். ஆனாலும் பழைய ஆலயத்தை சேதப்படுத்தாமல் விட்டு சென்றனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 கீழே குறையும்போது ஜலகண்டேஸ்வரர் ஆலயம் தெரியும்.

கடந்த மாதம் சாமியார் நித்யானந்தா மேட்டூர் நீர்தேக்கத்தில் தெரியும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை போன ஜென்மத்தில் தான் கட்டியதாகவும், ஆலயத்தின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த மூல லிங்கத்தை மீட்டு தரும்படி பாலவாடியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 28ம் தேதி புகார் அளித்தார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலயத்தை பார்வையிட்டனர். காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாருக்கு ரசீது வழங்கப்படாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி சக்திவேல் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அந்த புகார் மனு மீதான ரசீது நேற்று வழங்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கை வேண்டும் என போலீசாரிடம் கேட்டார்.

ஆனால், போலீசார் அவரிடம் 30 வினாக்கள் கேட்டு இன்று சம்மன் கொடுப்பதாகவும், அதற்கு பதிலளித்த பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே சக்திவேல் இன்று, மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை