சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்

புதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும் என்று, மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.

5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 65 நாட்களாகியும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை.

அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மத்திய அரசு, அம்மாநில பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது.

மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர், காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவது குறைவான அளவிலேயே இருந்தது. பொதுவாக மத்திய அரசின் திட்டங்கள் யாவும், காஷ்மீர் சட்டசபை, மத்திய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவற்றை அங்கு அமல்படுத்த முடியும்.

இதனால் பெரும்பாலான சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. எனவே, இந்த சட்டங்களால் கிடைக்கும் பலன்களை காஷ்மீர் மக்கள் அனுபவிக்க முடியவில்லை.

மேலும், மத்திய அரசு நிதியின் பெரும்பகுதி, ஏழைகளை சென்றடையவில்லை.

தற்போது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதால், ஊழலுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும். 106 மத்திய அரசு சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.

தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், கல்வி உரிமை சட்டம், பெற்றோர் பராமரிப்பு - நலவாழ்வு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் சட்டங்கள், ஊழலை காட்டிக்கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போன்ற சட்டங்கள் இனிமேல் காஷ்மீருக்கு பொருந்தும். மேற்கண்ட சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும்போது, அனைவருக்குமான கல்வித்தரம் உயரும்.

குறிப்பாக, ஏழைக் குழந்தைகளிடம் கல்வி சென்றடையும். கல்வி, தொழில் வளம், சுற்றுலா ஆகியன வளர்ச்சியடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை