தொடர்விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் ரயில், பஸ்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடர்விடுமுறை முடிந்து சென்னை திரும்பியதால் ரயில், பஸ்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்பியதால் ரயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில், பிராட்வே, வியாசர்பாடி, திருவல்லிக்கேணி, ஆவடி, அம்பத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வியாபாரம், வர்த்தகம் தொடர்பாக வசித்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் விடுதி மற்றும் அறை எடுத்து தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஐடி நிறுவனங்களிலும் ஏராளமானோர் வேலை செய்து  வருகின்றனர். இவர்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஆயுதபூஜை போன்ற தொடர் விடுமுறை நாட்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில், சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதிபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதாலும், அதற்கு முந்தை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து சென்னையில் தங்கியுள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று, விடுமுறையை கழிக்க திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு செல்லவும் விடுமுறை முடிந்ததும் சென்னை திரும்புவதற்கும் ரயில், பஸ்களில் டிக்கட் முன்பதிவு செய்தனர்.

சிலர் முன்பதிவு செய்யாமலும் நேரடியாகவும் பயணம் மேற்க்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 4,450 பஸ்களுடன் சேர்த்து 1,695 பஸ்கள் என மொத்தம் 6,145 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் மாநகர் போக்குவரத்துக்கழக ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், கே. கே. நகர் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி மக்கள் பயணம் மேற்கொண்டனர்.

இதையடுத்து சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை பண்டிகை விடுமுறை நேற்று முடிவடைந்தையடுத்து இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஐடி நிறுவனங்கள் செயல்படுவதால் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்தனர். அதனால் பொதுமக்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், புதுக்ேகாட்டை, வேலூர், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற  பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பினர்.

இதனால் செங்கல்பட்டு, மறைமலைநகர், பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி, கோயம்பேடு பகுதிகளில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.

அதைப்போன்று செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் இன்று விடுமுறை முடித்து சென்னைக்கு திரும்பியதால் வழக்கத்திற்கு மாறாக ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் ரயில்களில் பயணிகள் நின்ற படியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, பெருங்களத்தூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

.

மூலக்கதை