அதிவேக ‘350’: அஷ்வின் சாதனை | அக்டோபர் 06, 2019

தினமலர்  தினமலர்
அதிவேக ‘350’: அஷ்வின் சாதனை | அக்டோபர் 06, 2019

விசாகப்பட்டனம்: டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 350 விக்கெட்டை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் அஷ்வின். 

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 502/7 (டிக்ளேர்), தென் ஆப்ரிக்கா 431 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323/4 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. 395 ரன்கள் இலக்குடன், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் (3), புரூய்ன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். 

இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. அஷ்வின் ‘சுழலில்’ புரூய்ன் (10) போல்டானார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், இலங்கை முன்னாள் வீரர் முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 66 போட்டியில் இந்த இலக்கை எட்டி உள்ளனர். நியூசிலாந்தின் ரிச்சர்டு ஹாட்லி, தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் தலா 69 போட்டியுடன் இரண்டாவது இடம் வகிக்கின்றனர். 

 

அதிக சிக்சர் 

இப்போட்டியில், இரு அணிகள் சார்பில் மொத்தம் 37 (இந்தியா– 27, தென் ஆப்ரிக்கா– 10 )சிக்சர் அடிக்கப்பட்டன. இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் அடிக்கப்பட்ட போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன், நியூசிலாந்து– பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் (2014, சார்ஜா) 35 சிக்சர் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்தது.

 

சொந்த மண்ணில் ‘150’

மஹராஜை அவுட்டாக்கிய ஜடேஜா, சொந்த மண்ணில் 150வது விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் சொந்த மண்ணில் 150 விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார். முதல் இரு இடங்களில் இலங்கையின் ரங்கனா ஹெராத் (278), நியூசிலாந்தின் வெட்டோரி (159) உள்ளனர். 

 

ஐந்து விக்கெட்

இந்திய மண்ணில் நடந்த டெஸ்டில், 4வது இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது இந்திய பவுலர் ஆனார் ஷமி. ஏற்கனவே, கார்சன் காவ்ரி (எதிர்– இங்கிலாந்து, 1977), கபில் தேவ் (எதிர்– இங்கிலாந்து, 1981), மதன்லால் (எதிர்– இங்கிலாந்து, 1981), ஸ்ரீநாத் (எதிர்–தென் ஆப்ரிக்கா, 1996) இந்த இலக்கை எட்டி உள்ளனர்.

 

மூலக்கதை