இந்தியாவுக்கு இமாலய வெற்றி | அக்டோபர் 06, 2019

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு இமாலய வெற்றி | அக்டோபர் 06, 2019

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 502/7 (டிக்ளேர்), தென் ஆப்ரிக்கா 431 ரன்கள் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323/4 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தது. 395 ரன்கள் இலக்குடன், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. 

ஷமி அசத்தல்: கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் அஷ்வின் பந்தில் புரூய்ன் (10) அவுட்டானார். இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் ‘ஸ்பெஷலிஸ்ட்’ என்ற பெருமைக்குரிய ஷமி ‘வேகத்தில்’ மிரட்டினார். பவுமாவை ‘டக்’ அவுட்டாக்கிய இவர், கேப்டன் டுபிளசியை (13) போல்டாக்கினார். இதன்பின், அணியின் சரிவு துவங்கியது. குயின்டன் ‘டக்’ அவுட்டாக, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 27வது ஓவரை வீசிய ஜடேஜா ‘சுழல்’ ஜாலம் காட்டினார். முதல் பந்தில் மார்கரமை (39) அவுட்டாக்கிய இவர், நான்காவது பந்தில் பிலாண்டரை (0) திருப்பி அனுப்பினார். 

தொல்லை தந்த ஜோடி: முத்துசாமி, டேன் பீட் இணைந்து சிறிது நேரம் தொல்லை தந்தனர். பீட் அரை சதம் கடந்தார். 9வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தநிலையில், ஷமி பந்தில் பீட் (56) போல்டானார். ரபாடாவை (18) வெளியேற்றிய ஷமி, ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி ஐந்து, ஜடேஜா நான்கு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ரோகித் வென்றார். 

முதலிடம்

இவ்வெற்றியின் மூலம் 40 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் (160) உள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் வரும் 10ம் தேதி புனேயில் துவங்குகிறது.

‘ஸ்டம்ப்ஸ்’ உடைந்தது

இந்தியாவின் முகமது ஷமி வீசிய 60வது ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்ரிக்காவின் டேன் பீட் ‘போல்டானார்’. அப்போது ‘ஸ்டம்ப்ஸ்’ இரண்டாக உடைந்தது.

மூலக்கதை