தமிழக அணிக்கு 6வது வெற்றி | அக்டோபர் 06, 2019

தினமலர்  தினமலர்
தமிழக அணிக்கு 6வது வெற்றி | அக்டோபர் 06, 2019

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை வீழ்த்தி, தொடர்ந்து 6வது வெற்றியை பதிவு செய்தது.

விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்கில் நடக்கிறது. நேற்று, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், திரிபுரா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த தமிழக அணிக்கு முரளி விஜய் (18) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய அபினவ் முகுந்த் (84), பாபா அபராஜித் (87) அரைசதம் கடந்தனர். வாஷிங்டன் சுந்தர் (36), கேப்டன் தினேஷ் கார்த்திக் (40) ஓரளவு கைகொடுத்தனர்.

தமிழக அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. முருகன் அஷ்வின் (25), சாய் கிஷோர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய திரிபுரா அணிக்கு தமிழக பவுலர்கள் தொல்லை தந்தனர். விஜய் சங்கர் ‘வேகத்தில்’ உதியன் போஸ் (20) வெளியேறினார். சாய் கிஷோர் ‘சுழலில்’ பிரத்யூஷ் சிங் (24), நீலாம்புஜ் வாட்ஸ் (10) சிக்கினர். நடராஜன் பந்தில் மிலிந்து குமார் (24), கேப்டன் மணிசங்கர் முராசிங் (0), ஹர்மீத் சிங் (4) அவுட்டாகினர். முருகன் அஷ்வினிடம் சென் சவுத்தரி (20), அஜாய் சர்கார் (0) சரணடைந்தனர்.

திரிபுரா அணி 34.3 ஓவரில், 128 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3, முருகன் அஷ்வின், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை