ஆஸி., பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
ஆஸி., பெண்கள் அசத்தல் வெற்றி | அக்டோபர் 07, 2019

பிரிஸ்பேன்: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரேச்சல் ஹெய்ன்ஸ் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய பெண்கள் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று, 2வது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி, ரேச்சல் ஹெய்ன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய ஹீலி அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 116 ரன் சேர்த்த போது ஹீலி (69) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஹெய்ன்ஸ் (118), ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கேப்டன் மேக் லானிங் (45) ஓரளவு கைகொடுத்தார்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்தது.

மாதவி ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு சமாரி அட்டபட்டு (16) சுமாரான துவக்கம் தந்தார். அனுஷ்கா சஞ்ஜீவானி (36), ஹர்ஷிதா மாதவி (39) ஆறுதல் தந்தனர். கேப்டன் ஷசிகலா சிறிவர்தனே (22), நிலாக்சி டி சில்வா (25) சோபிக்கவில்லை.

மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை பெண்கள் அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகி விருதை ஆஸ்திரேலியாவின் ஹெய்ன்ஸ் வென்றார்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2–0 எனக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டி அக். 9ல் பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.

மூலக்கதை