இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் | அக்டோபர் 07, 2019

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரிவர் பெய்லிஸ் 56, இருந்தார். இவரது பதவிக் காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு செய்தது. இப்பதவிக்கு, முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், சர்ரே அணியின் இயக்குனர் அலெக் ஸ்டீவர்ட், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

முடிவில் கிறிஸ் சில்வர்வுட் 44, புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர், இங்கிலாந்து அணிக்காக (1996–2002) 6 டெஸ்ட், 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2017ல் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற எசக்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன்பின் இவர், கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

சில்வர்வுட் பயிற்சியின் கீழ், இங்கிலாந்து அணி முதன்முறையாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்கிறது. வரும் நவம்பரில் துவங்கும் இத்தொடரில் 5 சர்வதேச ‘டுவென்டி–20’ மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

மூலக்கதை