ரோகித் சர்மா ‘நம்பர்–17’: ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம் | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா ‘நம்பர்–17’: ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம் | அக்டோபர் 07, 2019

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா முதன்முறையாக 17வது இடம் பிடித்தார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 54வது இடத்தில் இருந்து முதன்முறையாக 17வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் விசாகப்பட்டனத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் கடந்து (176, 127 ரன்) புதிய சாதனை படைத்திருந்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்த மற்றொரு இந்திய அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால், முதன்முறையாக 25வது இடத்தை கைப்பற்றினார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் நீடிக்கிறார்.

அஷ்வின் ‘நம்பர்–10’: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 14வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ‘சுழலில்’ அசத்திய இவர், இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் கைப்பற்றினார். தவிர இவர், தனது 350வது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்தார். இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 18வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார்.

‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 2வது இடத்துக்கு முன்னேறினார். இதனையடுத்து வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மூலக்கதை