அஷ்வின் தான் ‘கிங்’ * மீண்டும் மிரட்டியது எப்படி | அக்டோபர் 07, 2019

தினமலர்  தினமலர்
அஷ்வின் தான் ‘கிங்’ * மீண்டும் மிரட்டியது எப்படி | அக்டோபர் 07, 2019

புதுடில்லி: தொடர்ந்து அணியில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட அஷ்வின், ஒரே போட்டியில் 8 விக்கெட் சாய்த்து, சுழற்பந்து வீச்சில் (‘ஸ்பின்’ பவுலிங்) தான் இன்னும் ‘கிங்’ தான் என்பதை நிருபித்தார்.

இந்திய அணியின் ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 33. கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்டில் அஷ்வின் இடத்தில் வந்த குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்த,‘அன்னிய மண்ணில் சுழற்பந்து வீச்சில் இனி எங்களது முதல் தேர்வு குல்தீப் தான்,’ என்றார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இதனால் 2018 டிச.,க்குப் பின் டெஸ்ட் அணியிலும் புறக்கணிக்கப்பட்டு வந்தார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மிக வெற்றிகரமான பவுலரான அஷ்வின், சமீபத்திய விண்டீஸ் தொடரில் சேர்க்கப்பட்ட போதும், ஒரு போட்டியில் கூட விளையாட களமிறக்கப்படவில்லை. இவரது ‘சகா’ ஜடேஜாவுக்கு அணியில் இடம் கிடைத்தது.

புதிய முறை

 இதற்காக அஷ்வின் மனம் சோர்ந்து விடவில்லை. புதிய முறைகளில் பந்துவீசுவது எப்படி என்பதை கண்டறிவதில் கில்லாடி அஷ்வின். சமீபத்திய டி.என்.பி.எல்., தொடரில் இடது கையை அதிகம் அசைக்காமல் வித்தியாசமாக பவுலிங் செய்தார்.

நாட்டிங்காம் கவுன்டி அணியில் இணைந்து 3 போட்டியில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தவிர பேட்டிங்கில் 197 ரன்கள் (3 போட்டி) எடுத்தார். அடுத்தடுத்து விடா முயற்சிடன் அணிக்கு திரும்ப போராடினார்.

மீண்டும் மிரட்டல்

 தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘சொந்த மண் என்று வரும் போது அஷ்வின் தான் எங்களது ‘நம்பர்–1’ சுழற்பந்து வீச்சாளர்,’ என்றார்.

இதனால் 9 மாதத்துக்குப் பின் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார். விசாகப்பட்டனம் ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமில்லாமல் இருந்த போதும் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அஷ்வின்.

முதல் இன்னிங்சில் 7 உட்பட மொத்தம் 8 விக்கெட் சாய்க்க, சக வீரர்கள் அஷ்வினை கொண்டாடினர். சுழற்பந்து வீச்சில் தான் ‘கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்த மகிழ்ச்சியில் உள்ளார் அஷ்வின்.

 

248

டெஸ்ட் அரங்கில் அஷ்வின் 350 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 248 விக்கெட்டுகள் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளில் கைப்பற்றியவை. இதன் சராசரி 70.85 சதவீதம். தவிர, 248ல் 203 விக்கெட்டுகள் சொந்தமண்ணில் பெற்றவை.

 

‘நம்பர்–10’

ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 14வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு முன்னேறினார். இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், 8 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை