தொடரை வென்றது இலங்கை: பாக்., மீண்டும் தோல்வி | அக்டோபர் 08, 2019

தினமலர்  தினமலர்
தொடரை வென்றது இலங்கை: பாக்., மீண்டும் தோல்வி | அக்டோபர் 08, 2019

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி லாகூரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பானுகா விளாசல்

இலங்கை அணிக்கு குணதிலகா (15), அவிசிகா பெர்னாண்டோ (8) ஏமாற்றினர். பானுகா, ஷெகன் ஜெயசூர்யா ஜோடி சிறப்பாக விளையாடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது, ஜெயசூர்யா (34) அவுட்டானார். பானுகா (77) அரை சதம் விளாசினார். மினோத் (0), இசுரு உடானா (8) விரைவில் திரும்ப, இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷானகா (27), ஹசரங்கா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

பிரதீப் அசத்தல்

பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே தடுமாறியது. நுவன் பிரதீப் ‘வேகத்தில்’ பாபர் ஆசம் (3) அவுட்டானார். ஹசரங்கா பந்துவீச்சில் ஷெஜாத் (13), கேப்டன் சர்பராஸ் அகமது (26) சிக்கினர். ஆசிப் அலி (29), இமாத் வாசிம் (47) ஆறுதல் தந்தனர். முடிவில், பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக நுவன் பிரதீப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம், ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் இலங்கை அணி 2–0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கவுள்ளது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார். சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், அதிக முறை ‘டக்’ அவுட்டான வீரர்கள் பட்டியலில், இலங்கை முன்னாள் வீரர் தில்ஷனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 10 முறை ‘டக்’ அவுட்டாகியுள்ளனர்.

மூலக்கதை