கும்ளேயை முந்துவாரா அஷ்வின் | அக்டோபர் 08, 2019

தினமலர்  தினமலர்
கும்ளேயை முந்துவாரா அஷ்வின் | அக்டோபர் 08, 2019

 புதுடில்லி: ‘‘டெஸ்ட் அரங்கில் கும்ளே சாதனையை அஷ்வின் தகர்ப்பது கடினம். எனது இலக்கை வேண்டுமானால் நெருங்கலாம்,’’ என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கும்ளே (619), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) உள்ளனர். நான்காவது இடத்தை 66 டெஸ்டில் 350 விக்கெட் வீழ்த்திய தமிழகத்தின் அஷ்வின் பெற்றுள்ளார். 

இதனால் மற்ற வீரர்களின் சாதனையை தகர்ப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது:

அஷ்வினை பொறுத்தவரையில் இப்போதுள்ள வேகத்தில் சென்றால் எப்படியும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார். என்னுடைய 417 விக்கெட் என்ற மைல்கல்லை நெருங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர் 500 விக்கெட்டுகள் என்ற சாதனை கூட எட்டலாம். 

மற்றபடி கும்ளே சாதனையை தகர்ப்பது கடினம் தான். இதற்கு மிக நீண்ட துாரம் செல்ல வேண்டும். இதை எட்ட வேண்டும் என்றால், அஷ்வின் நீண்ட ஆண்டுகள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

மூலக்கதை