நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளில் பிரசாரம் அனல் பறக்கிறது. திமுக தலைவர் மு. க.

ஸ்டாலின்  நாளை நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கிராமம், கிராமமாக ஓட்டு வேட்டையாடுகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 23 பேர்  போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி  நாராயணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு. க.

ஸ்டாலின் நாளை (புதன்), நாளை மறுநாள் (10ம் தேதி) மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில்  பிரசாரம் செய்கிறார். அவர் கிராமம், கிராமமாக ஓட்டு வேட்டையாடுகிறார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2. 30 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.

பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதேபோல் காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில்  பிரசாரம் செய்கிறார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் 15, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி உட்பட 12 பேர் களத்தில்  உள்ளனர்.

திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தலைவர் மு. க. ஸ்டாலின் வருகிற 12, 13, 18, 19 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.    அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14,15,18 ஆகிய தேதிகளிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் 13, 14,  17 ஆகிய தேதிகளிலும் பிரசாரம் செய்கின்றனர்.


நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலும் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளதால் தேர்தல்களம் களை கட்டியுள்ளது.

.

மூலக்கதை