கவர்னர் பதவி ஓய்வு எடுப்பதற்கானது அல்ல: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவர்னர் பதவி ஓய்வு எடுப்பதற்கானது அல்ல: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

சென்னை: கவர்னர் பதவி ஓய்வு எடுப்பதற்கானது அல்ல என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை கூறியுள்ளார். விஜிபி குழும தலைவர் வி. ஜி. சந்தோசம் எழுதிய ‘‘சமுதாய சிற்பி பெருந்தலைவர் காமராஜர்’’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில்  நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு புத்தகத்தை  வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ. நெடுமாறன், விஜிபி இயக்குனர் ரவிதாஸ் உட்பட ஏராளமானோர்  பங்கேற்றனர். கவர்னர் தமிழிசை பேசியதாவது: காமராஜர் பற்றிய புத்தகத்தை வெளியிட எனக்கு தகுதி இருக்கிறதா என்று யோசித்தேன்.

ஆனால், அவரை பார்த்து வளர்ந்தவள் என்ற முறையில்  எனக்கு தகுதி இருப்பதாக உணர்கிறேன். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று காமராஜர் அடிக்கடி கூறுவார்.

அந்த வகையில்  எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்துகிறேன். கவர்னர் பதவி என்பது ஓய்வு எடுப்பதற்கானது அல்ல.தெலங்கானா புதிய மாநிலம்  என்பதால், அரசின் பல திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளது. அரசின் திட்டங்களை எல்லாம் படித்து முடித்து அனுமதி வழங்க நேரமே  கிடைப்பதில்லை.

காமராஜர் நேரத்தின் அருமை பற்றி பலமுறை பேசியுள்ளார். அவரை பின்பற்றி, தெலங்கானாவுக்கு தமிழச்சியாக சென்று, நல்ல  பெயர் எடுக்க வேண்டாமா.

அதனால் தான் ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.   புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது காமராஜர் பற்றி பிரதமர் மோடி மேற்கோள் காட்டாமல் இருக்க மாட்டார். பணமதிப்பிழப்பின்போதுகூட,  காமராஜர் இருந்தால் என்னை பாராட்டி இருப்பார் என்று மோடி கூறினார்.

காமராஜர் பற்றி பல தகவல்களை எனது தந்தை கூறி கேட்டு இருக்கிறேன்.   அதையும் தாண்டி இந்த புத்தகத்தில் காமராஜர் பற்றிய அரிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு தெலங்கானா கவர்னர் தமிழிசை பேசினார்.

.

மூலக்கதை