முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம்: நாளை மறுநாள் 2வது ஆட்டம் தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடம்: நாளை மறுநாள் 2வது ஆட்டம் தொடக்கம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 7  விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.   இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395  ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதையடுத்து இந்திய அணி 203 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்ததால்,  சாம்பியன்ஷிப் பட்டியலில், 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, ஒரு  வெற்றி, ஒரு தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன.

தென்னாப்பிரிக்க அணிக்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட்  போட்டி என்பதால், இன்னும் புள்ளி கணக்கைத் தொடங்கவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட்  அசோசியசன் மைதானத்தில் காலை 9. 30 மணிக்கு தொடங்குகிறது.

.

மூலக்கதை