4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி

சென்னை: கடந்த 4 நாட்களாக 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக  உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா மாநில அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க  வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பஸ் வாங்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 50  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்டிரைக்கை தொடங்கினர்.

இதையடுத்து, ஊழியர்கள் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், தெலங்கானாவில் பெரும்பாலான  பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை.

குறிப்பாக கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடந்த 5-ந்தேதி  மாலைக்குள் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும்.

இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ்  அறிவித்தார்.

இதையடுத்து 1500 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். மற்ற ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு வராமல் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்களை அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார். மேலும்  வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் 2500 பஸ்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

4000 தனியார் பஸ்களும் பொது  போக்குவரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தசரா பண்டிகை விழா நடைபெறும் நிலையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, ‘‘மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பற்றி கவலைபடாமல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். சந்திரசேகர ராவின் இந்த  அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து  பதில் அளிக்குமாறு அம்மாநில ஐகோர்ட் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

.

மூலக்கதை