சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சர்வதேச திரைப்பட விழா அறிவிப்பு

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் கடந்த 1952ஆம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 44ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.

அதன் பின்னர் தற்போது 50ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய மொழியில் 26 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய திரைத் துறையில் வெளியாகி 50 வருடங்கள் கடந்த புகழ்பெற்ற 12 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விழாவில் சுமார் 10,000 சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தமிழ் மொழியில் இருந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள் திரையிடப்பட உள்ளன. மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயிரே, கோலாம்பி போன்ற திரைப்படங்களும் இந்தியில் உரி, சர்ஜிகல் ஸ்ட்ரைக், பதாய் ஹோ, கல்லி பாய், சூப்பர் 30 உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள், 26 இந்திய மொழி படங்கள் மற்றும் 16 குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட உள்ளன. மேலும் பார்வையற்றவர்களுக்காக, திரையில் வசனங்களுக்கு இடையில் வரும் காட்சிகளை விளக்கி கூறும் விதமாக ஒரு சிறப்பு திரைப்படம் திரையிடப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

மூலக்கதை