ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்

புதுடெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க மாணவர்களின் கைரேகை, கருவிழி சோதனை நடத்த வசதியாக நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை பெற மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் எண் திட்டம், கட்டாயம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், படிப்படியாக கட்டாய மாக்கப்பட்டது. அரசு திட்டங்களை பெறுவதில் மற்றுமின்றி, கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, தேர்வு போன்றவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு பல்வேறு தளங்களிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கடந்த 2018 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது.

யு. ஜி. சி, சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்று தீர்ப்பு கூறியது. அதனால், கல்வித்துறையில் ஆதார் கட்டாயம் என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஜூலையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதன்படி, அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், மத்திய அரசின் சேவைகளையும் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தனி நபர்கள் ஆதார் மற்றும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை தர வேண்டும். ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் வரும் போது, புதிய வழிமுறைகளின் படி தங்களின் அடையாளத்தை ஆப்லைனில் உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதியவர்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக, தமிழக சிபிசிஐடி போலீசார் 4 மாணவர்களை கைது  செய்துள்ளனர்.

அவர்களில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா, தர்மபுரி அரசு மருத்துவக்  கல்லூரி மாணவர் முகமது இர்பான், மேலும் மாணவர்கள் பிரவீன், ரகுல் டேவிஸ்  ஆகியோருடன் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், 2020ம் ஆண்டு நடக்கவுள்ள நீட் தேர்வை மேலும் கடுமையாக்க தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:  நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க, ஏற்கனவே பலவிதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதனையும் மீறி ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதி உள்ளனர்.

ஏற்கனவே நடந்த தேர்வுகளில் மாணவர்களின் கைரேகை மட்டும் வெற்றுத் தாள்களில் 2 முறை பெறப்பட்டது. ஆனால் அவை, டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைக்கப்படவில்லை.

முறைகேடுகள் ஏதேனும் நடந்தால், அந்த கைரேகை தாளை பயன்படுத்த பெறப்பட்டது. தற்போது நடந்துள்ள மோசடிகளை பார்க்கும்போது, மாணவர்களின் கைரேகை, கருவிழி ஸ்கேன் சோதனை வசதிகளை கொண்ட ஆதார் எண் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சிபிசிஐடி போலீசார், தேர்வெழுதிய மாணவர்களில் சந்தேகத்துக்கு இடமான சிலரின் கைரேகை பதிவுகளை கேட்டுள்ளனர். போலீசாருக்கு தேவையான அனைத்து சப்போர்ட்டும் செய்து வருகிறோம்.

ஆதார் கட்டாயமாக்குவது தொடர்பாக தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், மாணவர்களின் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, விண்ணப்பம்,  தேர்வு, கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை ஆகிய 4 நிலைகளில் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

இம்முறை நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஒவ்வொரு மருத்துவ மாணவரின் உண்மைத்தன்மையையும் சரிபார்க்க முடியும். அதேநேரம், அடுத்தாண்டு தேர்வு விதிகளை கடுமையாக்குவோம்; ஆனால் இது மாணவர்களுக்கு கடினம் அல்ல  என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்.

ஏற்கனவே தேர்வெழுதி முதலாமாண்டு  படித்து வரும் மாணவர்களின் கைரேகைகளை பெற வலியுறுத்த மாட்டோம். ஏனெனில், எங்கள் வேலை தேர்வு நடத்தி முடிவுகளை அறிவிப்பது மட்டுமே.

யார் யாருக்கு தொடர்பு?

கடந்த சில நாட்களுக்கு, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது.

அதாவது, ‘நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு என்பது நம்பும்படியாக இல்லை. இதில் எத்தனை மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

யார் யாருக்கு தொடர்பு உள்ளது. அதிகாரிகள் துணையில்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

எவ்வளவு பணம் கை மாறியது?’ என நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டனர்.

மேலும், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் வரும் 15ம் தேதி சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

.

மூலக்கதை