மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது வழக்கு உ.பி மாநில முஸாபர்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது வழக்கு உ.பி மாநில முஸாபர்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லக்னோ: வடமாநிலங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் தலித், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது உத்தரபிரதேச போலீசார் நீதிமன்ற உத்தரவுபடி வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலை 23ம் தேதி திரைப்பட இயக்குனர் அபர்னா சென், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, சமூகவியலாளர் ஆஷிஸ் நந்தி, ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி,  கொங்கனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று  ஆய்வாளர்கள் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி இருந்தனர்.

அந்த கடிதத்தில், வட மாநிலங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

குறிப்பாக தலித் மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் ‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தைக்காகவும் ‘பசு’வுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விசயம். கடந்த 2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் வெறுக்கத்தக்க கிட்டத்தட்ட 254 சம்பவங்கள் மதங்களின் பெயரால் நடந்துள்ளன.

2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 840 குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக மட்டுமே பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும் போதாது.

தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என்று எந்த பொருளும் இல்லை.



ஆளுங்கட்சிக்கு விரோதமாக விமர்சனங்களை வழங்குவது தேசத்துக்கு விரோதமாக கருதப்பட முடியாது. எதிர்ப்பை நசுக்காத தேசமே பலமான தேசம்.

பெரும்பாலான மக்கள் போற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மந்திரத்தை ஆயுதமாக்கி போர் முழக்கமாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இந்த சம்பவங்கள் குறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள்.

ஆனால், அது மட்டும் போதாது. ‘ராம்’ என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது.

அப்படியிருக்க, அந்த பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றம், பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக கடிதம் எழுதிய ராமச்சந்திர குஹா, மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்களுக்கு எதிராக நேற்று எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு முதன்மை குற்றவியல் நடுவர் சூர்யா காந்த் திவாரி முன் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, சதார் காவல் நிலையத்தில் நேற்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரரான வழக்கறிஞர் ஓஜா கூறினார்.



தொடர்ந்து, அவர் கூறுகையில், ‘நாட்டின் பிம்பத்தை களங்கப்படுத்தும் விதமாக 50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதினர். அது, அவரது சிறந்த செயல்திறனைக் குறைத்து மதிப்பீடு செய்வதாக உள்ளது.

மேலும், பிரிவினைவாத போக்கு உள்ளவர்களுக்கு ஆதரவளிப்பது போன்று உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளேன்’ என்றார்.

இதுகுறித்து, சதார் போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘தேசத் துரோகம், பொதுத் தொல்லை, மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

.

மூலக்கதை