‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு போன சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகம் உள்ளது.

அங்கு, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி காந்தியின் 150வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதேநாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது. அதனை திருடிய சில மர்ம நபர்கள், காந்தியின் புகைப்படத்துக்குக் கீழே தேசத் துரோகி’ எனப் பச்சை மையால் எழுதிச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த ரேவா மாவட்ட காங்கிரஸ் தலைவர் குர்மீத் சிங், கட்சி தொண்டர்களுடன் காந்தி அருங்காட்சியகத்துக்குச் சென்று, காந்தியின் அஸ்தி திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுதொடர்பாக குர்மீத் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் சட்டப் பிரிவு 295-ன் (புனித தளத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து, ரேவா மாவட்ட டிஎஸ்பி சிவ்குமார் வர்மா கூறுகையில், பாபு பவனில் அஸ்தி திருடப்பட்டுள்ள சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் அஸ்தியைத் திருடியவர்களை தேடி வருகிறோம்’’ என்றார். மேலும், திருட்டு தொடர்பாகப் புகார் அளித்த குர்மீத் சிங் கூறுகையில், ‘‘காந்தியின் சித்தாந்தம் மீண்டும் இழிவு படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதச் செயலை, காந்தியைக் கொலை செய்த கோட்சேவின் ஆதரவாளர்களே செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பாபு பவனில், காந்தி அஸ்தி திருடப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


.

மூலக்கதை