சர்வதேச ஹாக்கி 200 போட்டிகளில் ஆடி கிரேஸ் எக்கா சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச ஹாக்கி 200 போட்டிகளில் ஆடி கிரேஸ் எக்கா சாதனை

புதுடெல்லி: இந்திய ஹாக்கி வீராங்கனை தீப் கிரேஸ் எக்கா,  200 சர்வதேச போட்டிகளில் ஆடி, சாதனை படைத்துள்ளார். இந்திய மகளிர் ஹாக்கி அணி, இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு, அந்த அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி, நேற்று லண்டனில் நடந்தது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஒடிசாவை சேர்ந்த தீப் கிரேஸ் எக்கா, இப்போட்டியில் ஆடியதன் மூலம், நாட்டுக்காக 200வது சர்வதேச போட்டியில் ஆடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

25 வயதான கிரேஸ் எக்கா, ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் லுல்கிடிஹி கராமத்தில் பிறந்தவர். கடந்த 2011ம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பிடித்த இவர், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியின் மூலம் தனது சர்வதேச கணக்கை துவக்கினார்.

முன்னதாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பையில் வெண்கலம் வென்றது. அந்த தொடரில் கிரேஸ் எக்காவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

அதன் மூலம் அவர் பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அணியில் பின்கள தடுப்பாட்டக்காரராக ஆடி வரும் இவர், எதிரணியின் தாக்குதல்களை முறியடிப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்றுள்ளார்.

எதிரணி வீராங்கனைகள் கடத்தி வரும் பந்தை லாவகமாக  பறித்து, நமது அணியின் சென்டர் ஃபார்வர்டுக்கு பாஸ் செய்வதில் இவருக்கு நிகர் இவரே என கொண்டாடப்படுகிறார். இவரது இந்த நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் கடந்த 2018ல் நடந்த ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை தட்டி வந்தது.


200 சர்வதேச போட்டிகளில் ஆடி சாதனை படைத்த இவரை, நேற்று சக வீராங்கனைகள் பாராட்டி உற்சாகப்படுத்தினர். தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், ‘‘உண்மையிலேயே பெருமிதமாக உணர்கிறேன்.

இந்திய அணியுடனான எனது 10 ஆண்டு கால இந்த பயணம் எனக்கு என்றும் பெருமை தரக்கூடியது. வரும் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நாங்கள் அனைவரும் தற்போது ஆடி வருகிறோம்.

என்னுடைய மிகப்பெரிய லட்சியமும் அதுதான்’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை